பொதுப்பணித் துறையினர், செம்மண்ணை கொட்டி, புழல் ஏரியின் கொள்ளளவை குறைத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, புழல் ஏரி, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. இந்த ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த ஏரி, அதன் பின் துார் வாரப்படவில்லை. இதனால், ஏரியின் கொள்ளளவு, 30 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.ஏரியை துார் வாரும் முயற்சிகளை, 2016 முதலே, பொதுப்பணித் துறை துவங்கிவிட்டது; ஆனால், பணிகள் துவங்கப்படவில்லை.நடப்பாண்டில், நான்கு மாதங்களாக, ஏரி வறண்டு கிடந்த நிலையில், ஒப்பந்ததாரர் வாயிலாக, துார் வாரும் பணிகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பணிகளை துவங்காமல் கிடப்பில் போட்டுவிட்டது. இதனிடையே, ஏரியின் மதகுகளை ஒட்டிய, 'கான்கிரீட்' கரைகளை பலப்படுத்தும் பணி, மூன்று மாதங்களுக்கு முன் நடந்தது. இதற்காக, பொதுப்பணித் துறைக்கு, 10 கோடி ரூபாயை, அரசு வழங்கியது. ஒப்பந்ததாரர் வாயிலாக, இப்பணி மேற்கொள்ளப்பட்டது.கரைகளை பலப்படுத்தும் பணிக்காக, மதகின் இரு புறங்களிலும் நீர் தேங்கும் பகுதியில், லாரிகளில் செம்மண் எடுத்து வந்து கொட்டப்பட்டது. பணி முடிந்த நிலையில், ஒப்பந்த நிறுவனம், அதை அகற்றவில்லை.இதனால், ஏரியின் மதகை ஒட்டிய ஆழமான பகுதியில், அதிகளவில் மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையினரின் அலட்சியத்தால், ஏரியின் கொள்ளளவு குறைந்துள்ளதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
- நமது நிருபர் -