பெரியகுளம் : சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை சிலர் இரவு நேரங்களில் குழாயை மிதக்கவிட்டு, திருடுவதால் செல்லும் நீரின் அளவு குறைகிறது.
பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது சோத்துப்பாறை அணை. மொத்த உயரம் 126 அடி. அணை நிரம்பி மறுகால் பாய்ந்ததால் அக்.15 முதல் போகசாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பெரியகுளம் கண்மாய், தாமரைக்குளம் கண்மாய், பாப்பிபட்டி கண்மாய், மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் புரவு உட்பட பழைய ஆயக்கட்டு பகுதி மற்றும் லட்சுமிபுரம் புதிய ஆயக்கட்டு பகுதிகளான ஆயிரத்து 40 ஏக்கர் நிலங்களுக்கும், மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.இந்த நீரினை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில், நெல், கரும்பு, வாழை உட்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அணையிலிருந்து செல்லும் நீரினை திறந்தவெளி பகுதியில் விவசாயிகள் சிலர் இரவு 7:00 மணி முதல் காலை 8:00 மணி வரை குழாயினை மிதக்கவிட்டு, மின்மோட்டார் பொருத்தி திருடுகின்றனர். இதனால் நீர் பாசனத்திற்கு முழுமையாக சென்றடையாது. விவசாயத்திற்கு முதலில் கிடைக்கும் நீர், தங்கு தடையின்றி கடைசி நிலத்திற்கு செல்ல வேண் டும். பிளாஸ்டிக் குழாய்களை துண்டித்து தண்ணீர் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.