ராமநாதபுரம் : -கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட அரசு உதவிகளை மீண்டும் வழங்கக் கோரி பேய்க்கரும்பு மீனவர் கூட்டுறவு சங்க மீனவர்கள் 30க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பேய்க்கரும்பு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பேக்கரும்பு மட்டுமின்றி அரியாங்குண்டு, தென்குடா, நொச்சிவாடி, சத்தியாநகர், தண்ணீர் ஊத்து, தங்கச்சிமடம் ஆகிய பகுதி மீனவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தநிலையில், கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு இடையே உள்ள பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு் தொடரப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பிரச்னைக்குரியவர்கள் என குறிப்பிடப்பட்ட 72 பேரை வெளியூர்காரர்கள் எனக் கூறி சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.
சங்கத்தில் இருந்து நீக்கியதால் 72 பேருக்கும் மீன்பிடி தடைக்காலத்திற்கான இடைக்கால நிவாரணநிதி உள்ளிட்ட அனைத்து அரசு சலுகைகளும் கடந்த 2018 முதல் நிறுத்தப்பட்டன.
சங்க உறுப்பினர்களான தங்களை நீக்கியது தவறு என்றும், மீண்டும் சங்கத்தில் இணைத்து அரசு உதவிகளை பெற்றுத்தரவேண்டும் எனக் கோரி அரியாங்குண்டு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மீனவர்கள் 30க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின் அவர்கள் கூறியதாவது: பேய்க்கரும்பு பகுதி கடல் சார்ந்தது அல்ல. ஆனால், நொச்சிகுடா, அரியாங்குண்டு,சத்யாநகர் உள்ளிட்டவற்றில் பாரம்பரிய மீனவர்களே உள்ளனர். இப்பகுதிகள் அனைத்தும் பேக்கரும்பு ஊராட்சிக்கு உட்பட்டவை. ஆனால், தனிப்பட்ட நபர்களின் பிரச்னைக்காக பாரம்பரிய மீனவர்களை கூட்டுறவு சங்கத்திலிருந்து விலக்கியும், அரசு சலுகைகளை தராமலும் இருப்பது சரியல்ல.
பேய்க்கரும்பு பகுதியில் மீனவர்கள் அல்லாதோர் பலர் கூட்டுறவு சங்கத்தில் இருக்கின்றனர். அதுகுறித்து நடவடிக்கை தேவை என்றனர்.