ஸ்ரீவில்லிபுத்துார் : முறையான வாறுகால் வசதியில்லை, குண்டும், குழியுமான ரோடு, போதிய இடங்களில் மின்விளக்குகள் இல்லை, குடிநீர் சப்ளையில் பற்றாக்குறை என பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி பரிதவித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஊராட்சி, ஆண்டாள்புரம் மக்கள்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியது திருவண்ணாமலை ஊராட்சி. அதில் ஒன்று ஆண்டாள்புரம். முழு அளவில் நெசவாளர்கள் அதிகளவில் வசித்து வரும் இப்பகுதியில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதுமில்லாத நிலை பல வருடங்களாக நீடித்து வருகிறது.
இப்பகுதியில் சிறுமழை பெய்துவிட்டால் சேறும், சகதியாகி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நடக்க முடியாமல் வழுக்கி விழுகின்றனர். அதிகளவில் மழை பெய்தால் இப்பகுதியில் மழைநீர் தேங்கி, ஒரு குளம்போல் காட்சியளிக்கும்.
எந்த ஒரு தெருவிலும் கழிவுநீர் வாறுகால்கள் இல்லாததால், கழிவுகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.
தினசரி துப்பரவு பணி நடக்காததால் துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்பட்டு
உள்ளது.
தெருவிளக்குகள் இருந்தும் சரிவர எரிவதில்லை. தேவையுள்ள இடங்களிலும் கூடுதல் மின்
விளக்குகள் அமைக்கப்படவில்லை. குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில், 10 நாட்
களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்
படுகிறது என கூறுகின்றனர்
இப்பகுதி மக்கள்.
மழை பெய்தால் சகதி
ஆண்டாள்புரத்தில் வீடுகள் அதிகரித்து வரும் நிலையில், எந்த தெருவிலும் ரோடு வசதி செய்து தரப்படவில்லை. எல்லா பகுதிகளிலும் மண்ரோடு தான் இருக்கிறது. இதில் வெயில் காலத்தில் துாசிகள் பறக்கிறது.மழைக்காலங்களில் சேறும்,சகதியாகி விடுகிறது. இதனால் டூவீலர்களில் சென்றால், வழுக்கி விழும் நிலை ஏற்படுகிறது. முறையான கட்டமைப்பு வசதியில்லாததால், விஷப்பூச்சிகள் வீடு தேடி வருகிறது. உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தெய்வேந்திரன், குடியிருப்பாளர்.
அதிகரிக்கும் சுகாதாரக்கேடு
இங்கு முறையான கழிவுநீர் வாறுகால்கள் இல்லாததால், கழிவுகள் ஆங்காங்கே பரவி கிடக்கிறது. போதிய குப்பை தொட்டிகள் இல்லாததால் மண்ரோட்டில் தான் கழிவுகளை கொட்ட வேண்டியுள்ளது. இதனால் சுகாதாரக்கேடு, துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், போதிய துப்பரவு பணியாளர்கள் இல்லாததால் தினசரி துப்பரவு பணி நடப்பதில்லை. எனவே, இப்பகுதியில் கூடுதல் பணியாளர்கள் நியமித்து, தினசரி துப்புரவு பணி செய்ய, ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-விஜய், குடியிருப்பாளர்.
ஆட்டோக்கள் கூட வருவதில்லை
இப்பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் குறைபாடுகள் இருந்தாலும், பல ஆண்டுகளாக ரோடுகள் அமைக்காததால், பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் நடக்கவே முடியாதநிலை இருக்கிறது. சகதிக்கு பயந்து ஆட்டோக்கள் வர முடியாத நிலை இருக்கிறது. இதனை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.
-வள்ளி, குடியிருப்பாளர்.
எரியாத விளக்குகள்
இப்பகுதியில் பல தெருவிளக்குகள் இருக்கிறது. இருந்தும் அவை போதுமானதாக இல்லை. இருக்கும் விளக்குகளும் அவ்வப்போது எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் மேடு, பள்ளம் தெரியாமல் தவறி விழும் நிலை இருக்கிறது. ஏற்கனவே, தார்ரோடு அமைக்காமல் மண்ரோடாக இருப்பதால், மழைக்காலங்களில் தட்டு தடுமாறித்தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, அதிகரித்து வரும் குடியிருப்புகளுக்கு ஏற்ப, ரோட்டினை சீரமைத்து கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாந்தி, குடியிருப்பாளர்.