கண்டமங்கலம் : கண்டமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கும் பகுதியில் விபத்துகளைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் - புதுச்சேரி 45ஏ தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில், கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகே இருந்து, பழைய போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் வரை 500 மீட்டர் துாரத்திற்கு மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லை.இதனால் கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம் எதிரிலும், அம்பேத்கர் சிலை, நவமால்மருதுார் சாலை சந்திப்பு, பழைய போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கும் நிலை நீடித்து வருகிறது.
குறிப்பாக நவமால்மருதுார் சாலை சந்திப்பு அருகே 100 மீ., துாரத்திற்கு அவ்வப்போது தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவு நீரால் அப்பகுதியில் சாலை அடிக்கடி பழுதாவது வாடிக்கையாக உள்ளது.கடந்த 6 மாதங்களுக்கு முன் குண்டும் குழியுமான சாலையால் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வந்தனர்.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணியை மேற்கொள் இருந்த ஒப்பந்ததாரர்கள் சாலையை சீரமைத்தனர்.
இருப்பினும் அப்பகுதியில் தற்போது குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கிய பகுதியில் சாலை நடுவே, ஒரு மீட்டர் சுற்றளவிற்கு பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் ஏற்கெனவே வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வந்தனர்.தற்போது பள்ளம் தெரியாமல் மழைநீர் தேங்கியுள்ளதால் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகும் அவலம் மீண்டும் நீடித்து வருகிறது.எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்காமல் உரிய வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.