செஞ்சி : வராக நதியில் 43 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட செவலபுரை தடுப்பணையில் இருந்து வல்லம் ஒன்றிய ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புவியியல் ரீதியாக வெளி மாவட்டங்களில் இருந்து எந்த நதியும் செஞ்சி பகுதியில் பாயவில்லை. பாக்கம் மலைக் காடுகளில் துவங்கும் வராக நதியே செஞ்சி பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.வராக நதியின் குறுக்கே 1915ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூடப்பட்டில் தடுப்பணை கட்டப்பட்டது.இதில் இருந்து மேலச்சேரி, சிங்கவரம், நாட்டேரி, சிறுகடம்பூர் மற்றும் குப்பத்து ஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது.
அதன் பிறகு 1969ம் ஆண்டு செவலபுரை கிராமத்தில் வரகநதியின் குறுக்கே தடுப்பணை கட்ட துவங்கி 1976ம் ஆண்டு நிறைவு செய்தனர். இதில் இருந்து வல்லம் ஒன்றியத்திலுள்ள செல்லப்பிராட்டி, மேல் களவாய், காரியமங்கலம், பெரும்புகை, ஆனத்துார், ஆனங்கூர் உட்பட 5 பொதுப்பணித்துறை ஏரிகளுக்கும், 11 ஊராட்சி ஒன்றிய ஏரிகளுக்கும் தண்ணீர் செல்ல வேண்டும். இந்த ஏரிகள் மூலம் 2,400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.இதற்காக 15 கி.மீ., தூரத்திற்கு வாய்கால் அமைத்துள்ளனர்.
அணை கட்டிய முதல் ஆண்டில் இதன் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் சென்றது. அடுத்த ஆண்டே வாய்க்காலின் பல இடங்களில் மண் சரிந்தும், வாய்க்கால் துார்ந்தும் அணை செயலிழந்தது.கடந்த 10 ஆண்டுக்கு முன்பு வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து தண்ணீர் செல்ல வழி செய்தனர். என்ற போதும் முமு அளவில் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.இதன் பிறகு 2016ம் ஆண்டு 10 கோடி ரூபாய் மதிப்பில் 5.2 கி.மீ., துாரத்திற்கு மண் கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றினர். இந்த பணி 2017ம் ஆண்டு முடிந்தது.அந்த ஆண்டில் மூன்றாவது ஆண்டாக வாய்க்காலில் தண்ணீர் கொண்டு சென்றனர். அந்த ஆண்டு மழை குறைவாக பெய்ததால், முழு அளவில் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.
கடந்த சில நாட்களாக பாக்கம் மலைக்காடுகளில் பெய்து வரும் கன மழையினால் செஞ்சி பாக்கம், சத்தியமங்கலம், நயம்பாடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியுள்ளன. மேலும் 15க்கும் மேற்பட்ட ஏரிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.வராக நதியில் கடந்த 17ம் தேதியில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லத் துவங்கியுள்ளது. இதனால் செவலபுரை தடுப்பணை நிறைந்து உபரி நீர் வெளியேறியது.
இந்த அணையில் இருந்து வல்லம் ஒன்றியங்களுக்கு செல்லும் பாசன வாய்க்காலை பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டுள்ளனர். இதனால் நேற்று முன்தினம் முதல் வல்லம் ஒன்றிய ஏரிகளுக்கு தண்ணீர் சென்றது.தொடர்ந்து மழைக்கான வாய்ப்பு இருப்பதால் அனைத்து ஏரிகளும் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வல்லம் ஒன்றியத்தைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.