திருவல்லிக்கேணி : கல்லுாரி மாணவனிடம் பணம் வாங்கி ஏமாற்றிய, தி.மு.க., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தாலுகாவைச் சேர்ந்தவர், மூர்த்தி, 21. இவர், 2017ல் திருவல்லிக்கேணி, லால்பேகம் தெருவில் உள்ள விடுதியில் தங்கி, பி.எஸ்சி., விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். அப்போது, சேப்பாக்கத்தைச் சேர்ந்த, சகோதரர்களான கவித்திரன், 26, நிவிதிரன், 24, ஆகியோர் நண்பர்களாகினர்.அப்போது, தங்கள் தந்தை கண்ணன், தி.மு.க., வட்ட செயலராக உள்ளதாகவும், அவருக்கு பணம் கஷ்டம் உள்ளதாக இருவரும், மூர்த்தியிடம் தெரிவித்தனர். இதையடுத்து, கல்லுாரியில் கட்ட இருந்த, 1.20 லட்சம் ரூபாயை, மூர்த்தி அவர்களிடம் கொடுத்தார்.
ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் பணத்தை திருப்பி கொடுக்காமல், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்தனர்.இதில், தி.மு.க., பிரமுகர் கண்ணன், திருவல்லிக்கேணி காவல் நிலைய, சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, கண்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர்.