இடைப்பாடி: மணல் கடத்தலை தடுக்க முயன்றபோது, விபத்து ஏற்பட்டதில், எஸ்.எஸ்.ஐ., காயமடைந்தார். இதனால், லாரி டிரைவரை, போலீசார் தேடுகின்றனர்.
இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷன், எஸ்.எஸ்.ஐ., ஜெகநாதன், 53. இவர், வெள்ளார்நாயக்கன் பாளையம் அருகே நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மணல் ஏற்றப்பட்டு வந்த, ஒரு டிப்பர் லாரியை நிறுத்த அறிவுறுத்தினார். டிரைவர் நிறுத்தாமல் சென்றார். அதிர்ச்சியடைந்த ஜெகநாதன், ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் விரட்டிச்சென்றார். நாச்சிபாளையத்தில், லாரி முன்புறம் சென்று, பைக்கை நிறுத்தினார். அப்போது, டிரைவர் பிரேக் போட்டபோது, பைக் மீது லாரி மோதியது. இதில், ஜெகநாதன் தடுமாறி விழுந்து காயமடைந்தார். இதுகுறித்து, அவர் புகார்படி, இடைப்பாடி போலீசார், சிறு காயம் ஏற்படும் வகையில் விபத்து ஏற்படுத்துதல், மணல் கடத்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிந்து, தப்பிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.