சூலுார்:சூலுார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், ஏழாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டிகள், சூலுார் பொன்விழா கலையரங்கில் இரு நாட்கள் நடந்தன.தெற்கு மண்டல போலீஸ், பாரதியார் பல்கலை அணி, கோவை, திருப்பூர், சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 94 அணிகள் பங்கேற்றன.நாக் அவுட் முறையில் நடந்த போட்டிகளில், அரையிறுதி போட்டிகளுக்கு நான்கு அணிகள் தேர்வாகின. முதல் அரையிறுதி போட்டியில், சூலுார் ஸ்போர்ட்ஸ் கிளப், கோவை டூரிஸ்ட் பேர்ட்ஸ் அணிகள் மோதின.இதில், 29- 24 என்ற புள்ளி கணக்கில், டூரிஸ்ட் பேர்ட்ஸ் அணி வென்றது.இரண்டாவது அரையிறுதி போட்டியில், கரூர் வி.ஆர்.கே., அணியும், சேலம் விநாயகா பிரதர்ஸ் அணியும் சந்தித்தன.இதில், 27- 12 என்ற புள்ளி கணக்கில், கரூர் அணி வென்றது. பரபரப்பாக துவங்கிய இறுதி போட்டியில், கரூர் அணியும், டூரிஸ்ட் பேர்ட்ஸ் அணியும் மோதின.விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில், 29 -17 என்ற புள்ளி கணக்கில் கரூர் வி.ஆர்.கே., அணி வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. மூன்றாவது இடத்தை, சூலுார் ஸ்போர்ட்ஸ் கிளப் பெற்றது.சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக பொதுச்செயலாளர் சபியுல்லா, கோவை மாவட்ட செயலாளர் தண்டபாணி மற்றும் பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.