| கூலி உயர்வு கேட்கும் விசைத்தறியாளர்கள் கலெக்டரிடம் மனு Dinamalar
கூலி உயர்வு கேட்கும் விசைத்தறியாளர்கள் கலெக்டரிடம் மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:41

திருப்பூர்:கடந்த, 2014 ஒப்பந்த கூலியில் இருந்து, 50 சதவீதம் கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டுமென, கோவை -திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை - திருப்பூர் மாவட்டங்களில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. அவற்றில், 95 சதவீதம் தறிகள், கூலிக்கு நெசவு செய்து வருகின்றன.


கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கலெக்டரிடம் கொடுத்த மனு:பல்வேறு சிரமத்துக்கு மத்தியில் தொழில் நடத்தி வருகிறோம். தொழிலாளர் பற்றாக்குறையால், மென்மேலும் சிரமம் அதிகரித்துள்ளது. இதுவரை, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு பெறப்பட்டது. தற்போது, ஆறு ஆண்டுகளாகியும் உயர்வு பெறவில்லை. கடந்த எட்டு ஆண்டுகளாகவே சரியான கூலி உயர்வு கிடைக்கவில்லை.விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, வரவு-செலவு விவரங்களை எழுதி கொடுப்பதில்லை. முன்பு இருந்ததை போல், வாராவாரம், 'பில்' மூலம் விசைத்தறியாளருக்கு எழுதி கொடுக்க வேண்டும்.


தொழிலை தொடர்ந்து நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதால், 2014ல் உருவான ரகம் வாரியாக ஒப்பந்த கூலியில் இருந்து, 50 சதவீதம் உயர்வு வழங்கப்பட வேண்டும்.வாராந்திர பாவு -நுால் வரவு செலவுகளை போட்டு அல்லது 'பில்' கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பாவு -நுால் - ஜவுளி, காலி பீம்களுக்கு, இதுவரை விசைத்தறியாளர்கள் வாடகை கொடுத்து வருகின்றனர். இனி, 50 சதவீத வாடகையை ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.மாவட்ட நிர்வாகம், இருமாவட்ட கூட்டு கமிட்டியை அழைத்து பேசி, கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X