திருப்பூர்:தண்ணீர் இல்லாததால், 12 ஆயிரம் தென்னை மரங்கள் காயும் நிலையில் உள்ளதாக, விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.காங்கயம், கத்தாங்கண்ணி கிராமத்தில், நொய்யலில் இருந்து குளத்துக்கு செல்லும் ராஜவாய்க்காலில் இருந்து, விவசாயத்துக்கு பயன்படுத்தும் மடைகள் உள்ளன. விவசாயிகள், மதகுகள் வழியாக, தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்தனர்.
காங்கயம் - கோபி ரோட்டின் கிழக்கே, குளத்து மதகு வரை, 350 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.தற்போது, ராஜவாய்க்கால், தனியார் பங்களிப்புடன் துார்வாரி சுத்தம் செய்யப்பட்டது. வழக்கமான ஆழத்தைவிட, மூன்று அடி துாரம் ஆழமாக குழி எடுத்ததால், விவசாய மதகுகளில் தண்ணீர் ஏறுவதில்லை. ராஜவாய்க்காலில் இருந்து, விவசாய மடைகளுக்கு தண்ணீர் திரும்புவதில்லை. எதிர்பார்ப்புடன் காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அப்பகுதி விவசாயிகள் நேற்று கலெக்டரின் மக்கள் குறைகேட்பு முகாமில், மனு கொடுத்தனர். மனுவில்,' கத்தாங்கண்ணி ராஜவாய்க்கால் மூலமாக, 350 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. மொத்தம், 12 ஆயிரம் தென்னை மரங்கள், தீவன பயிர்களை காப்பாற்ற இயலாத நிலை உள்ளது.கிராம மக்களின் வாழ்வாதாரமே, கால்நடைகள் மற்றும் விவசாயத்தை நம்பியே இருக்கிறது. எனவே, ராஜவாய்க்காலில் இருந்து, விவசாய மதகுகளில் தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்; குளத்துக்கும் தண்ணீர் கொண்டு சேர்க்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.