திருவேற்காடு: தீபாவளி சீட்டு நடத்தி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் தலைமறைவாகினர்.
திருவேற்காடு, சன்னிதி தெருவில், அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ், 30, ரஞ்சித்குமார், 34, ஆகியோர், தீபாவளி சீட்டு அலுவலகம் நடத்தினர். பிரதிமாதம், 500 ரூபாய் வீதம், 12 மாதம் செலுத்தினால், தீபாவளிக்கு, 2 கிராம் தங்கம், 5 கிராம் வெள்ளி பொருட்கள், சமையல் பாத்திரம், இனிப்பு மற்றும் பட்டாசு ஆகியவை வழங்குவதாக அறிவித்திருந்தனர்.
மேலும், 50 வாடிக்கையாளர்களை, சீட்டில் இணைப்போருக்கு, இரண்டு சீட்டுக்குரிய பொருட்கள் இலவசமாகவும், 100 பேரை இணைப்போருக்கு, நான்கு சீட்டுக்குரிய பொருட்கள் இலவசமாகவும் அளிப்பதாக, ஆசைக்காட்டி இருந்தனர்.இதனால், நுாற்றுக்கும் மேற்பட்டோர், அவர்களது, தீபாவளி சீட்டில் இணைந்து, பணம் செலுத்தினர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல், அவர்கள் பல லட்ச ரூபாயுடன் தலைமறைவாகிவிட்டனர். இதனால், ஏமாற்றமடைந்தோர், திருவேற்காடு போலீசில் புகார் செய்தனர், போலீசார் விசாரிக்கின்றனர்.