| பச்சையப்பன் கல்லுாரி முதல்வர் தேர்வு செய்ய நீதிபதி நியமனம் Dinamalar
பச்சையப்பன் கல்லுாரி முதல்வர் தேர்வு செய்ய நீதிபதி நியமனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
03:40

சென்னை : பச்சையப்பன் அறக்கட்டளையை சேர்ந்த, நான்கு கல்லுாரிகளுக்கு முதல்வர்களை தேர்வு செய்ய, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியை, சென்னை, உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.



சென்னை, பச்சையப்பன் ஆண்கள் கல்லுாரி முதல்வராக, என்.சேட்டு நியமிக்கப்பட்டார். முதல்வர் தேர்வை எதிர்த்து, கல்லுாரி பேராசிரியர் நந்தினி உள்ளிட்டோர், மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களில், 'பல்கலை மானிய குழுவின் விதிமுறைகள் மற்றும் தனியார் கல்லுாரிகள் ஒழுங்குமுறை சட்டம் பின்பற்றப்படவில்லை' என, கூறப்பட்டுள்ளது. வழக்கை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். பச்சையப்பன் கல்லுாரி முதல்வராக, சேட்டு நியமிக்கப்பட்டதை ரத்து செய்து, தேர்வு முறையில் நடந்த ஊழல் நடவடிக்கைகள் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.



இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.பச்சையப்பா அறக்கட்டளை நிர்வாகத்துக்காக, மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பச்சையப்பன் கல்லுாரி முதல்வராக சேட்டு நியமிக்கப்பட்டதில், உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அவரது நியமனம் செல்லாது என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம்.



சேட்டு தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. பச்சையப்பன் அறக்கட்டளையை சேர்ந்த, ஆறு கல்லுாரிகளில், நான்கு கல்லுாரிகளுக்கு, முதல்வர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. நான்கு கல்லுாரிகளுக்கும் முதல்வர்களை தேர்வு செய்ய, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் நியமிக்கப்படுகிறார்.புதிய தேர்வுக் குழுவை நியமித்து, மூன்று மாதங்களுக்குள், கல்லுாரி முதல்வர்களை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X