சேலம்: நாடக நடிகையிடம் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய, கூலித்தொழிலாளிக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி, சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம், இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி, ராமாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன், 26. கூலித்தொழிலாளியான இவர், அவ்வப்போது நாடகங்களில் நடித்து வந்துள்ளார். இதில் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த, 33 வயது நாடக நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், கரு உருவாகி எட்டு மாதத்தில் இறந்துள்ளது. இதையடுத்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், 2015ல், சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரில், பாலமுருகன் ஏமாற்றியதுடன், அவரது தந்தை மணி, சித்தப்பா தியாகராஜன் ஆகியோர் தாக்கியதாக அந்த பெண் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், பாலமுருகனுக்கு மூன்றாண்டு சிறை, 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி முருகானந்தம் உத்தரவிட்டார். மணி, தியாகராஜன் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.