வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி அருகே, மாவட்ட எல்லையில் உள்ள மருளையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு எதிரில், 40 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட குடியிருப்பு கடந்த, 20 ஆண்டுகளாக பயன்பாடின்றி பாழடைந்துள்ளது. இதன் அருகே பொது கழிப்பிடம், 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை உள்ளது. ரேஷன் கடைக்காக கட்டிய இடத்தில் தற்போது நூலகம் செயல்படுகிறது. இதே போல் பொது கழிப்பிடமும் பயன்பாட்டில் உள்ளது. அதே வேளையில், ஆசிரியர் குடியிருப்பு பயன்பாடின்றி, பாழடைந்து மேற்கூரைகளில் விரிசல்கள் விழுந்து, எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதற்கு கதவுகளும் இல்லாததால், இரவில் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பழைய கட்டடத்தை இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்டி அதில் ரேஷன் கடை அல்லது அங்கன்வாடி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.