கூடலுார்:கூடலுார் ஓவேலி பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட புதிய கட்டடங்களை இடிக்க, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது.கூடலுார் ஓவேலி பகுதியில், செக்சன்-17 அரசு நிலங்களின் புதிய கட்டடங்கள் கட்டவும்; வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கோர்ட் உத்தரவு பெற்று, அங்குள்ள ஆதிவாசி கிராமங்களுக்கு மட்டும், தேவையான அடிப்படை வசதிகளை, மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.இந்நிலையில், சிலர் அனுமதியின்றி புதிய கட்டடங்கள் கட்டுவதாக, புகார் எழுந்தது. அதிகாரிகள் ஆய்வில், அனுமதி இன்றி புதிதாக, 15க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, ஓவேலி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில், அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதில், 'அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடத்தை உடனடியாக சொந்த செலவில், இடித்து அப்புறப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், பேரூராட்சி சார்பில் இடிக்கப்பட்டு, அதற்கான செலவுத்தொகை வசூலிக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.