கம்பம், : நீதிமன்ற உத்தரவுப்படி கம்பம் அரசு பஸ் டெப்போ மேலாளர் பாண்டியராஜன்
மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கம்பம் அரசு பஸ் இரண்டாவது டெப்போவில் டிரைவராக பணியாற்றி வந்தார். ஜூலை மாதம் 28 ம் தேதி, பஸ்சை எடுக்க வந்தபோது, மேலாளர் பாண்டியராஜன், தடுத்து எடுக்கவிடவில்லை. அதற்கு முந்தைய நாள் கம்பத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு சென்ற பாலகிருஷ்ணன், பேரிகார்டுகளும், வேகத்தடைகளும் இருப்பதால், குறித்த நேரத்திற்குள் திண்டுக்கல் சென்று வர முடியவில்லை என்று கூறி, பஸ்சை செம்பட்டியுடன் திருப்பிக் கொண்டு வந்ததே காரணம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து பாலகிருஷ்ணன் நத்தம் டெப்போவிற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.
வழக்கு: இந்த சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன், உத்தமபாளையம் மாஜிஸ்திரேட்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை மரியாதை குறைவாக பேசி,
பணியை செய்ய விடாமலும், அடிக்க வந்ததாகவும் கூறி, மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வலியுறுத்தினார். நீதிமன்ற உத்தரவுப்படி மேலாளர் பாண்டியராஜன் மீது, கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.