ப.வேலூர்: பூசாரிபாளையத்தில், 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்ததில், இரண்டு ஆடுகள் பலியாகின. ப.வேலூர் அருகே, வெங்கரை டவுன் பஞ்., பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் செல்வம், 52; விவசாயி. இவரது தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை, 9:00 மணியளவில் அவரது தோட்டத்திற்குள் புகுந்த, 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அங்கு மேய்ந்து கொண்டிருந்த நான்கு ஆடுகளை கடித்து குதறியது. ஒரு செம்மறி ஆடு, ஒரு வெள்ளாடு உயிரிழந்தது. மேலும், இரு ஆடுகள் படுகாயமடைந்தன. பலியான இரண்டு ஆடுகளின் மதிப்பு, 15 ஆயிரம் ரூபாய் என, செல்வம் தெரிவித்தார். மேலும், கடந்த மாதம், மூன்று கட்டு சேவல் களையும் நாய்கள் கடித்து கொன்றுள்ளன. எனவே, தெருநாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.