கரூர்: புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையத்தில், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: டெங்கு காய்ச்சல், ஏ.டி.எஸ்., கொசுக்களால் பரவக்கூடியது. இவ்வகை கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கும். வீட்டைச் சுற்றியும் தூக்கி எறியப்பட்ட டயர்கள், பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலீதின் பைகள், டீ கப், தேங்காய்ச் சிரட்டைகள் போன்ற பொருட்களில், தேங்கிய மழைநீரிலும், பயன்பாட்டிற்காக வீட்டில் நீர் சேமித்து வைத்துள்ள சிமென்ட் தொட்டிகள், பேரல்கள், பிரிட்ஜ், ஏர்கூலர்கள், நீர்த்தேக்க தொட்டிகளிலும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, பயனற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேரூராட்சி செயல் அலுவலர்கள் சுப்பிரமணி, பாலசுப்பிரமணி உட்பட பலர், நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.