| அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி 15 பயணியர் படுகாயம் Dinamalar
அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி 15 பயணியர் படுகாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2019
13:56

ஆத்தூர்: வாழப்பாடி அருகே, புறவழிச்சாலை இணைப்பு வழிப்பாதையில், அதிவேகமாக வந்த தனியார் பஸ், அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், 15 பயணியர் படுகாயமடைந்தனர்.


ஆத்தூரிலிருந்து, வாழப்பாடி வழியாக சேலம் நோக்கி, 'எஸ்.எஸ்.எஸ்.,' என்ற தனியார் பஸ் சென்றது. நேற்று காலை, 8:10 மணியளவில் முத்தம்பட்டி புறவழிச்சாலை இணைப்பு வழிப்பாதையை அதிவேகமாக கடக்க முயன்றபோது, எதிரே சேலத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோதி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், தனியார் பஸ்சின் பின்புறத்தின் ஒரு பகுதியும், அரசு பஸ்சின் முன் பகுதியும் நொறுங்கியது. தனியார் பஸ்சில் படுகாயம் ஏற்பட்டு தவித்த பயணிகளை, அப்பகுதி மக்கள் மற்றும் வாழப்பாடி போலீசார் மீட்டனர். அரசு, தனியார் பஸ்களில் வந்த, பெத்தநாயக்கன்பாளையம், வைத்தியகவுண்டன்புதூரை சேர்ந்த ஆனந்த், 31, கார்த்திக்ராஜன், 20, நரசிங்கபுரம், கருப்பையா, 46, கெங்கவல்லி ராஜேஸ்கண்ணா, 30, ராஜா, 42, பாரூக்அலி, 45, ரமேஷ், 34, பழனியாபுரம் பச்சமுத்து, 68, வாழப்பாடி ரிஷிக், 19, ஆத்தூர் முத்துக்குமரன், 55, பெரம்பலூர், மேலப்புலியூர் பிரபாகரன், 40, முத்தம்பட்டி சிவசங்கர், 19, உளுந்தூர்பேட்டை சொர்ணாம்பாள், 83, உள்பட, 15 பேர் காயமடைந்தனர். 10 பேருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, அரசு பஸ் டிரைவர் மேட்டூர் சரவணன், 40, அளித்த புகார்படி தனியார் பஸ் டிரைவர் வெள்ளாளகுண்டம் செந்தில்குமார், 45, என்பவரை கைது செய்தனர்.


* வாழப்பாடி நகர் மற்றும் புறவழிச்சாலை, முத்தம்பட்டி வழியாக செல்கிறது. வாழப்பாடியிலிருந்து, புறவழிச்சாலைக்கு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது, அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இங்கு 'ரவுண்டானா' அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.


* இரு ஆண்டுகளில் 73 பேர் பலி: சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலை இடையே, ஆத்தூர், வாழப்பாடி உள்பட எட்டு புறவழிச்சாலைகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த, 2018ல், 74 விபத்துகளில், 30 பேர் பலியாகியுள்ளனர்; 92 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல், 2019ல், செப்., வரை, 65 விபத்துகளில், 43 பேர் பலியாகியுள்ளனர்; 43 பேர் படுகாயமடைந்துள்ளனர். இரு ஆண்டுகளில், 73 பேர் பலியாகியுள்ளனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X