திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் 2,250 ஆசிரியர்களுக்கு தேசிய அளவில் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு (நிஷ்தா) பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தொடக்க, உயர்நிலை ஆசிரியர்கள் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இப்பயற்சி அளிக்கப்படுகிறது. இந்தாண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 3 மையங்களில் தினமும் 450 பேர் வீதம் 5 நாட்களுக்கு 2,250 தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் துவக்கி வைத்தார்.
பயிற்சி நோக்கம்:
மாணவர்களை மனப்பாடம் செய்ய வைக்காமல், வாழ்வியலோடு செயல்பாடுகளில் ஈடுபட செய்ய வேண்டும். வங்கியில் பண பரிவர்த்தனை மேற்கொள்வது, அரசு அலுவலக சேவையை பெறுதல் போன்ற அன்றாட பணிகளை கற்று கொடுக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம், சுற்றுப்புற சுகாதாரம் பேணுதல் குறித்து அறிவுரை வழங்க வேண்டும்.
கணினி, ஸ்மார்ட்போன் மற்றும் வலைத்தளங்களில் கல்விக்கு தேவையான தகவல்களை பெறுதல் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும். வீடியோ, ஆடியோ பதிவுகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். மாணவர்களுக்கு புரியும் வகையில் கற்பித்தல், அவரவர் திறமையை வெளிப்படுத்த செய்து அங்கீகாரம் செய்வது குறித்து, பயற்சி அளிக்கப்படுகிறது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.