திருப்போரூர்: வேங்கடமங்கலத்தில், கல்லுாரி மாணவரை சுட்டுக் கொன்ற, நண்பர் விஜய் பயன்படுத்திய துப்பாக்கியை, கல் குவாரியில் இருந்து போலீசார் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டம், தாழம்பூர் அடுத்த, வேங்கடமங்கலத்தைச் சேர்ந்தவர் ஷோபனா, 45, மகன் முகேஷ், 19; தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்.கேள்விஇவரும், இவரது நண்பரான, அதே பகுதி கேசவன் மகன் விஜய், 21, என்பவரும், விஜய்யின் வீட்டு அறையில், 5ம் தேதி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, முகேஷை துப்பாக்கியால் சுட்டு, விஜய் தப்பி ஓடினார்.இதையடுத்து, செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில், 6ம் தேதி விஜய் சரணடைந்தார்.வரும், 20ம் தேதி வரை சிறையில் அடைக்க, நீதிபதி காயத்ரி உத்தரவிட்ட நிலையில், விஜய்யை, மூன்று காவலில், தாழம்பூர் போலீசார் எடுத்தனர்.'துப்பாக்கி கிடைத்தது எப்படி, எதற்காக முகேஷை சுட்டாய், துப்பாக்கி எங்கிருக்கிறது' உள்ளிட்ட கேள்விகளை, விஜய்யிடம் போலீசார் கேட்டதாக தெரிகிறது.இதற்கு, கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுாரைச் சேர்ந்த செல்வம் என்ற ரவுடியிடம் துப்பாக்கி வாங்கியதாகவும், தெரியாமல் முகேஷை சுட்டு விட்டதாகவும் விஜய் கூறியதாக சொல்லப்படுகிறது.எதிர்பார்ப்புமேலும், நல்லம்பாக்கம் அருகே உள்ள கல் குவாரியில் துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.தாழம்பூர் போலீசார், அந்த கல் குவாரிக்கு சென்று, 'பிஸ்டல்' வகையைச் சேர்ந்த, விஜய் பயன்படுத்திய துப்பாக்கியை மீட்டதாக கூறப்படுகிறது.இன்று, விஜய்யிடம் வாக்குமூலம் பெற்று, நீதிமன்றத்தில், போலீசார் ஒப்படைக்க உள்ளனர். இதையடுத்தே, முகேஷின் கொலையின் உண்மை நிலவரம் தெரியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.