திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் கிளை நுாலகம், பழைய கட்டடத்தில் இயங்குவதால், மழைக்காலத்தில் கசியும் நீரால், புத்தகங்கள் வீணாகின்றன. இதனால், போதுமான வசதிகளுடன், புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, துவக்கப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.இவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும், திருக்கழுக்குன்றம், மலையடிவாரம் அருகே, 1954ல், வாடகை கட்டடத்தில் கிளை நுாலகம் துவங்கப்பட்டது. 1962ல், சொந்த கட்டடம் கட்டப்பட்டது.
நுாலகத்தில், 40 லட்சம் ரூபாயில், 66 ஆயிரத்து, 651 புத்தகங்கள் உள்ளன. தவிர, நாளிதழ், வார இதழ், மாத இதழ் என, 150 இதழ்கள் வருகின்றன; 800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். பழமையான இந்த நுாலகத்தில், போதுமான அடிப்படை வசதி இல்லை என, புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, வாசகர்கள் கூறியதாவது:தினமும், 200 பேர் வந்து செல்கின்றனர். ஆண், பெண் தனித்தனியாக அமர்ந்து படிக்க, நுாலகத்தில் இடவசதி இல்லை. கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் கூரையில், பல இடங்களில் சிமென்ட் பூச்சு உதிர்ந்துள்ளது; சுவரில் விரிசல் உள்ளது.
சிறிய மழை பெய்தால்கூட, நுாலகத்தில் தண்ணீர் கசிகிறது. இதனால், புத்தகங்கள் நனைந்து வீணாகின்றன. மேலும், நுாலக சுற்றுச்சுவரின் ஒருபகுதி உடைந்து, தண்ணீர் உள்ளே வருகிறது.திருக்கழுக்குன்றம் கிளை நுாலகத்திற்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.