திருப்போரூர் : நெல்லிக்ககுப்பத்தில், 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் உபகரணங்கள், விபத்து ஏற்படும் முன் மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சியில், கோவில்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு கட்டடங்கள் பல உள்ளன. விவசாயம் சார்ந்த இப்பகுதியில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இப்பகுதியில், 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்கம்பம் மற்றும் கம்பிகள், பல இடங்களில் பழுதடைந்தும், தாழ்வாகவும் தொங்குகின்றன.இதனால், மின் விபத்து ஏற்படும் என கருதிய அப்பகுதியினர், இரண்டு மாதங்களுக்கு முன், மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் புகார் தெரிவித்தனர்.
மின் கம்பம், கம்பிகளை மாற்றும்படி, மின் வாரிய அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், இதுவரை, மின் வாரிய அதிகாரிகள், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.எனவே, மின்வாரிய அதிகாரிகள் மெத்தனமாக இல்லாமல் பழுதடைந்துள்ள, தாழ்மட்டத்தில் உள்ள மின்கம்பம், கம்பிகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.