காஞ்சிபுரம் : பராமரிப்பு இல்லாத மதகு வழியாக, தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என, கீழ்புத்துார் ஏரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த, ஆசூர் ஊராட்சி, கீழ்புத்துார் ஏரியில் நிரம்பும் தண்ணீரால், 400 ஏக்கர் நிலம் பயன் பெற்றுவந்தது.கடந்த ஆண்டு, போதிய அளவு பருவமழை பெய்யாததால், ஏரியில் தேங்கவில்லை. இதனால், ஏரியை நம்பியிருந்த நிலங்கள், தரிசாக விடப்பட்டன.இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை காலம் துவங்கியதும், சில நாட்கள் நல்ல மழை பெய்தது. அந்த தண்ணீர், கீழ்புத்துார் ஏரியில் தேங்கியுள்ளது. ஆனால், அதன் மதகு வழியாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:கடந்தாண்டு மழை இல்லாததால், கீழ்புத்துார் ஏரியில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால் விவசாயம் செய்யவில்லை.சில நாட்களுக்கு முன் பெய்த மழை நீரால், ஏரியில், ஓரளவுக்கு தண்ணீர் உள்ளது. ஆனால், பராமரிப்பு இல்லாத மதகு வழியாக தண்ணீர் வெளியேறுகிறது.விவசாய பணி துவங்கவுள்ள நிலையில், ஏரியில் இருக்கும் நீரும் வீணாகிவிடும் நிலை உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.