காஞ்சிபுரம் : 'பொன்விளைந்த களத்துார் கிராமத்தில், பாதாள வழியை கைவிட்டு, மேம்பாலம் கட்ட வேண்டும் என, கிராமவாசிகள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பொன்னையா தலைமையில், கலெக்டர் வளாக கூட்டரங்கில், நேற்று நடந்தது.கூட்டத்தில், பொன்விளைந்த களத்துார் கிராமத்தினர் அளித்த மனு விபரம்:பொன்விளைந்த களத்துார் கிராமத்தில், உதயம்பாக்கம் செல்லும் வழியில், ரயில்வே இருப்பு பாதை உள்ளது.தற்போது நடந்து வரும் ரயில்வே பணியில், இந்த கேட் மூடுவதாகவும், பொதுமக்கள் கடக்க, பாதாள வழி அமைக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த இருப்பு பாதை வழியாக, அரசு பேருந்து, கனரக வாகனங்கள், படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு லாரிகள் இயக்கப்படுகின்றன.
தவிர, எங்கள் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஏரிக்கு, 15 துணை ஏரியிலிருந்து தண்ணீர் வந்து சேருகிறது. ஏரியிலிருந்து நீர் வெளியேறும் போது, பாதாள வழியில் நீர் தேங்கினால், தண்ணீர் வற்ற பல நாட்கள் ஆகும். மேலும், பொதுமக்களால் எளிதில் செல்ல முடியாத நிலையும் ஏற்படும். எனவே, பாதாள வழி அமைப்பதை விட்டு, மேம்பாலம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
திருப்புட்குழி, மதுரா பாலுச்செட்டிசத்திரம் கிராமத்தினர் அளித்த மனு விபரம்:எங்கள் கிராமத்தில், என்.எஸ்.கே., நகரில் உள்ள உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி துாண்கள் பழுதடைந்துள்ளன.கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொட்டி என்பதால், திடீரென இடிந்து விழுமோ என, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொட்டியின் துாண்களை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.முகாமில், பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார் தொடர்பாக, 450 பேர் மனு அளித்தனர். கொடி நாள் வசூல் நிதியாக, பல்வேறு துறை அதிகாரிகள், 19.61 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை, கலெக்டரிடம் வழங்கினர். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கல், தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இழப்பீடு வேண்டும்
சாலை விரிவாக்கத்திற்கு கையகப்படுத்திய நிலத்திற்கு, உரிய இழப்பீடு வழங்க கோரி, அனைத்து விவசாய ஒருங்கிணைப்பு குழுவினர் அளித்த மனு விபரம்:திருப்போரூரில், ஓ.எம்.ஆர்., புறவழிச்சாலையின், ஆறுவழிச்சாலை பணிக்கு, திருப்போரூர் - தண்டலம் இடையே, விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதுவரை, இழப்பீட்டிற்கு பணம் எதுவும் தராமல், பணிகளை துவக்கியுள்ளனர்.எனவே, சாலை பணி தொடர்வதை நிறுத்த வேண்டும்; எங்களுக்கு இழப்பீடு பெற்று தரவேண்டும். ஏழை விவசாயிகளின் வாழ்வியல் உரிமையை காக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.