திருக்கோவிலுார் நகரத்தில், நிலத்தடி நீர் மேலாண்மையை பாதுகாக்க தென்பெண்ணை ஆற்றில் இருந்து பெரிய ஏரிக்கு தண்ணீர் வர வாய்க்கால் அமைக்கப்பட்டு, ஏரி நிரம்பியதும், ஏரியிலிருந்து, நகரின் மையத்தில் இருக்கும் தீர்த்தக்குளம், தெப்பக்குளங்களுக்கு தண்ணீர் வருவதற்கு வசதியாக பாதாள கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
தீர்த்த குளத்திற்கு தண்ணீர் வரும் பாதாள கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால் அந்த குளம் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில், தெப்ப குளத்திற்கான கால்வாய் அவ்வப்போது சீரமைக்கப்பட்டு ஏரியில் இருந்து தண்ணீர் வந்ததால் குளம் நிரம்பி ஆண்டிற்கு ஒருமுறை உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் தெப்பல் உற்சவம் நடைபெறும்.கடந்த 2002ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் கோபால், தீவிர முயற்சியால் துார்ந்துபோன தீர்த்த குளம் துார்வாரப்பட்டு அதற்கான பாதாள கால்வாய் சீரமைக்கப்பட்டது. அதே தருணத்தில் தெப்ப குளத்திற்கு வரும் கால்வாயும் துார் வாரப்பட்டது. இதன் காரணமாக இரண்டு குளங்களும் நிரம்பியது.இதனைத் தொடர்ந்து குளத்தை பராமரிப்பது பேரூராட்சி நிர்வாகமா? பொதுப்பணித்துறையா? கோவில் நிர்வாகமா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக குளத்திற்கு வரும் பாதாள கால்வாய் அவ்வப்போது துார் வாரப்படுவது தடைபட்டது. இதனால், கடந்த 7 ஆண்டுகளாக தெப்பக்குளம், தீர்த்த குளங்களுக்கு தண்ணீர் வரும் பாதாள கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, ஏரியிலிருந்து தண்ணீர் வருவது முற்றிலும் நின்று போனது.
இதனால் இரண்டு குளங்களும் வறண்டன. இதனால், நிலத்தடி நீர் மட்டம் மளமளவென சரிந்து 400 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.தமிழக அரசு குடிமராமத்து பணி என்ற திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஏரி, குளங்களை சீரமைத்து வரும் நிலையில், பழமையும், பெருமையும் வாய்ந்த புராதனமான திருக்கோவிலுார் தெப்பக்குளம், தீர்த்த குளங்களை சீரமைப்பது குறித்து பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காதது நகர மக்கள் மட்டுமின்றி பக்தர்களையும் மனம் நோகச்செய்துள்ளது.