சாலையோர பள்ளத்தால் ஆபத்து: ஜவஹர் பஜாரில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய, சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பணிகள் முடிந்த பின், குழியை சரியாக மூடாமல், அப்படியே விட்டு சென்றுவிட்டனர். மழை பெய்யும் போது, அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இரவில், இரு சக்கர வாகனங்களில், அவ்வழியாக செல்பவர்கள், பள்ளம் இருப்பது தெரியாமல், தடுமாறி விழுகின்றனர். மேலும், தண்ணீர் தேங்குவதால், கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது.
குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்: கரூர் வாழை மண்டி அருகே, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை குழாய் மூலம் இந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. வறட்சியின் போது, ஆழ்துளை கிணறு வறண்டுவிட்டதால், தொட்டிக்கு தண்ணீர் நிரப்புவது நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள், போதுமான தண்ணீர் கிடைக்காமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மாற்று ஏற்பாடு மூலம், தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டும்.
பூ மார்க்கெட் அருகே குப்பை குவிப்பு: கரூர் ராஜாஜி சாலை அருகில் பூ, மார்க்கெட், வாழை மண்டி உள்ளது. அருகே குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இருந்த போதும், மார்க்கெட் வியாபாரிகள், பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்களை குப்பைத் தொட்டியில் போடாமல், சாலையோரத்தில் வீசுகின்றனர். சாலையில் பல்வேறு இடத்தில், ஆங்காங்கே குப்பை சிதறி கிடக்கிறது. சாலையில் வீசப்படும் குப்பை, அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் விழுவதால் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
குப்பைத் தொட்டி உடைப்பால் தவிப்பு: கரூர் பூ மார்க்கெட் பகுதியில் குப்பை சேகரிக்க வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் உடைந்த நிலையில் உள்ளன. அப்பகுதி மக்கள், குப்பையை சாலையோரத்தில் கொட்டுகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் சுகாதார கேடு ஏற்படுகிறது. மேலும், குப்பையில் இருந்து, கடும் துர்நாற்றம் வீசுவதால், சாலையில் நடமாட முடியாமல் மக்கள் திண்டாடுகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக, அச்சத்தில் உள்ளனர். குப்பை சேகரிப்பு தொட்டி வைக்க வேண்டும்.
கிடப்பில் உள்ள திட்ட குழாய்கள்: வேலாயுதம்பாளையத்தில், குடிநீர் திட்டப்பணிக்காக, பல இடங்களில் ராட்சத குழாய்கள் போடப்பட்டுள்ளன. அதில், பயன்படுத்தப்படாத பல குழாய்களை அப்புறப்படுத்தாமல் அப்படியே சாலையோரம் விட்டுவிட்டனர். சாலையில் போடப்பட்ட குழாய்கள், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன. வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன. இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.