குளித்தலை: நங்கவரத்தில், கட்டி முடித்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ள சமுதாய கூடத்தை, உள்ளாட்சி தேர்தலுக்கு முன் திறக்க வேண்டும் என, அப்பகுதி பொது மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். குளித்தலை அடுத்த. நங்கவரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, தெற்குப்பட்டி வாரச்சந்தை வளாகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன், 90 லட்சம் ரூபாய் மதிப்பில், சமுதாய கூடம் கட்டப்பட்டது. ஆனால், வாடகை எவ்வளவு வசூலிக்க வேண்டும் என வரையறை செய்வதில் நிலவும் குழப்பத்தால், சமுதாய கூடம் திறக்கப்படாமலேயே உள்ளது. இதனால், அதிக பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள இந்த சமுதாய கூடம், மக்களுக்குப் பயன்படாமல் பாழடைந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், சமுதாய கூடத்தை திறக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.