சென்னை:பண்ணை பசுமை நுகர்வோர் கடையில், குறைந்த விலையில், தரமான வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருவது, மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வெங்காயம் வரத்து குறைந்ததால், கிலோ, 50 - 60 ரூபாய் வரை, தற்போது வெங்காயம் விலை உயர்ந்துள்ளது.தமிழக அரசின் முயற்சியால், மக்களின் அன்றாட தேவைக்காக, பண்ணை பசுமை நுகர்வோர் கடையில், 1 கிலோ வெங்காயம், 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறைந்த விலையில், தரமான வெங்காயம் விற்பனை செய்யப்படுவதால், பண்ணை பசுமை நுகர்வோர் கடையில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.இது குறித்து, பண்ணை பசுமை நுகர்வோர் கடை விற்பனையாளர் கூறியதாவது:தமிழக அரசு, வேறு எங்கும் கிடைக்காத விலைக்கு, தரமான காய்கறிகளை பண்ணை பசுமை நுகர்வோர் கடை வாயிலாக விற்பனை செய்து வருகிறது. விற்பனை துவங்கிய சில மணி நேரத்திலேயே, வெங்காயம் முழுமையாக விற்பனை ஆகிவிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.