விருதுநகர்:பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட கடையை அகற்ற வேண்டும், சாலை , வாறுகால் , குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உட்பட பல மனுக்கள் விருதுநகரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் சிவஞானத்திடம் கொடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் விருதுநகர் ஆமத்துார் கிராம மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில்,'ஆமத்துார் பெரியகுளம் கண்மாயின் தெற்கு கரைக்கும், வெள்ளூர் வழியாக செல்லும் ரோட்டிற்கும் இடையில் 30 அடி பள்ளம் இருந்தது. அப்பள்ளத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மண்ணை போட்டு மூடி மக்களின் பொது பயன்பாட்டிற்காக களம் அமைக்கும் முயற்சியில் உள்ளோம். இந்நிலையில் வெள்ளூரை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடை அமைத்துள்ளனர்.
இதன் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என குறிப்பிட்டுள்ளனர்.
அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி ஊராட்சி ரெங்கா நகர் மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில், 'ஊராட்சியில் கட்டக்கஞ்சம்பட்டி மேற்கு பகுதி ஸ்ரீ ஜெயம் கார்டன், நாராயணபுரம், ரெங்காநகர் பகுதிகளில் 150 வீடுகள் உள்ளது. திருச்சுழி செல்லும் பிரதான சாலையில் இருந்து எங்கள்
பகுதிக்கு செல்ல சாலை வசதிகள் இல்லை. அனைத்து தெருக்களும் குண்டும், குழியுமாக
உள்ளது.
மழைக்காலங்களில் நோய் பரவும் அபாயம் உள்ளது. போதிய தெரு விளக்குகள் இல்லாததால் , இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடியவில்லை. இதனால் இரவு நேரங்களில் திருட்டு
சம்பவங்கள் நடக்கிறது. குடிநீர் பிரச்னையும் பெரியஅளவில் உள்ளது,' என குறிப்பிட்டுள்ளனர்.
பாதியில் நிற்கும் பணி
விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி என்.டி., முருகன் நகர் மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில், எங்கள் பகுதிக்கு முறையான சாலை, வாறுகால் கட்டமைப்போ செய்து தரவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு விருதுநகர் ஊராட்சி ஒன்றிய ஒப்பந்தகாரர் ஒருவரின் பணியாளர்கள் சிலர் வாறுகால் வசதியுடன் பேவர் பிளாக் சாலை அமைக்க உள்ளதாக கூறினர். அதன்பின் மண் அள்ளும் இயந்திரம் மூலம் வாசல் படிக்கட்டுகள், வாறுகால் கட்டமைப்புகளை அகற்றினர்.
அதன்பின் அப்படியே விட்டு சென்று விட்டனர். இப்பகுதியில் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. பணி தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என கேட்டுள்ளனர்.