கோவை: பல்கலை மானியக்குழுவால், 'செல்லாது' என அறிவிக்கப்பட்ட, 'பிரிவு - பி'- பி.எச்டி., படிப்பு மாணவர்களுக்கு சாதகமாக, பாரதியார் பல்கலை நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாரதியார் பல்கலையில், 2006ல் அறிமுகப்படுத்தப்பட்ட, 'பிரிவு- - பி' பி.எச்டி., முறையானது, நாட்டின் எந்த கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியரும், முகம் பாராத எத்தனை மாணவர்களுக்கு வேண்டுமானலும் 'கைடாக' இருக்கலாம் என்கிறது. இதில், முறைகேடு நடந்ததை தொடர்ந்து, 2015ல், தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், தடைக்கு முன்பே இப்பிரிவில், 7,000 பேர் சேர்க்கப்பட்டு விட்டனர்.இதுதொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளது. 'இம்முறையிலான படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு தொலைதுார கல்வி முறை என குறிப்பிடாமல் பட்டம் வழங்கினால்... ஐந்து ஆண்டுகள் 'ரெகுலர்' முறையில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். பி.எச்டி., தரமும் தாழ்ந்துவிடும்' என, கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இவ்விவகாரத்துக்கு தீர்வு காணும் வகையில், இரு மாதங்களுக்கு முன் பல்கலை தரப்பில் குழு அமைக்கப்பட்டது. இதன் அறிக்கையின்படி, கடந்த, 8ம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், 'பிரிவு-பி' மாணவர்களுக்கு, 'பிரிவு-பி' என்றோ, தொலைதுார கல்வி முறை என்றோ குறிப்பிடாமல் சான்றிதழ் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது, ரெகுலர் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், 'நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, சிண்டிகேட் கூட்ட நிகழ்ச்சி நிரலில் விவாதித்ததே கோர்ட் அவமதிப்பாகும். பல்கலை மானியக்குழு, இப்படிப்பை செல்லாது என தெரிவித்த பின், 'பிரிவு -பி' என குறிப்பிடாமல் சான்றிதழ் வழங்குவது ஏற்புடையது அல்ல' என்றார்.
பல்கலை ஆசிரியர் சங்க, மாநில ஆலோசகர் பிச்சாண்டி கூறுகையில்,'' பிரிவு- பி முறையில் பி.எச்டி., முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதற்கு தடையில்லை; ஆனால், யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, 'தொலைதுார கல்வி முறை' என்று குறிப்பிட்டே சான்றிதழ் வழங்கப்படவேண்டும். அவ்வாறு குறிப்பிடாமல் பட்டம் வழங்கும் பட்சத்தில், முறையாக படித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவர். அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்,'' என்றார்.
பல்கலை துணைவேந்தர் காளிராஜிடம் கேட்டபோது, ''சப்-கமிட்டி அறிக்கையின்படி, சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது; முடிவு ஏதும் மேற்கொள்ளவில்லை. சட்ட ஆலோசனையின்படி, ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவு மேற்கொள்ளப்படும்,'' என்றார்.