புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு நிலவியது.
புதுச்சத்திரம் - சிதம்பரம் வழித்தடத்தில் பூவாலை வழியாக, தடம் எண் 9 அரசு பஸ் தினமும் சென்று வருகிறது. இதனை பயன்படுத்தி இப்பகுதி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் சிதம்பரம், புவனகிரி, புதுச்சத்திரம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த அரசு பஸ் வரவில்லை. இதுபோல் இந்த அரசு பஸ் தினமும் சரிவர இயக்கப்படாதது, பண்டிகை நாட்களில் சிறப்பு பஸ்சாக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி விடுவதால், இப்பகுதி மக்கள் பாதிக்கின்றனர்.
இதனை கண்டித்து, பூவாலை பகுதி பொது மக்கள், பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க., பொருளாளர் பாஸ்கரன் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 7.15 மணிக்கு பூவாலை வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.தகவலறிந்த புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் அமுதா, சம்பவ இடத்திற்கு விரைந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்ததை தொடர்ந்து, காலை 8.05 மணிக்கு பஸ்சை விடுவித்தனர்.கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்த சம்பவத்தால், இப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.