| மாவட்டம் பிரித்ததில் திருக்கோவிலூர் மக்கள்... ஏமாற்றம்! கள்ளக்குறிச்சியில் இணைத்ததால் அதிர்ச்சி Dinamalar
மாவட்டம் பிரித்ததில் திருக்கோவிலூர் மக்கள்... ஏமாற்றம்! கள்ளக்குறிச்சியில் இணைத்ததால் அதிர்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
23:45

திருக்கோவிலுார் : மாவட்டம் பிரிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் திருக்கோவிலுார் நகரம் விழுப்புரம் மாவட்டத்திலேயே தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்த்ததால் நகர மக்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.



விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக கடந்த ஜனவரி 8ம் தேதி முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கு தனி அலுவலராக கிரண்குராலா கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி நியமிக்கப்பட்டார்.



விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், விழுப்புரம் அருகே உள்ள சுற்று வட்டார பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் எனவும்; கள்ளக்குறிச்சி, புதிய மாவட்ட தலைமையிட அமைவிடம் தொடர்பான மனுக்கள் அதிகளவில் குவிந்தன.திருவெண்ணெய்நல்லுார், அரசூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், வணிகர்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் விழுப்புரம் மாவட்டத்திலேயே தொடர விரும்புவதாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.



இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து முறையான அரசாணை நேற்று முன்தினம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதுபற்றிய தகவல் நேற்று காலை தெரியவந்தது.அதன்படி விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு விழுப்புரம், திண்டிவனம் என இரண்டு கோட்டங்களுடன் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனுார், மரக்காணம், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட தாலுகாக்களுடன் புதிதாக உருவாக்கப்படவுள்ள திருவெண்ணைநல்லுார் தாலுகாவையும் சேர்த்து மொத்தம் 9 தாலுகாக்களுடன் விழுப்புரம் மாவட்டம் இயங்க உள்ளது.



அதேபோன்று கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் கோட்டத்தில், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, இதனுடன் புதிதாக உருவாக்கப்பட உள்ள கல்வராயன்மலை தாலுகாவையும் சேர்த்து 6 தாலுகாக்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் திருக்கோவிலுார் தாலுகாவில் பெரும்பாலான கிராமங்கள் பிரிக்கப்பட்டு திருவெண்ணைநல்லுார் தாலுகாவுடன் சேர்க்கப்பட உள்ளது.இதனால், திருக்கோவிலுார் நகரம் உள்ளிட்ட ஒரு சில கிராமங்களுடன், மணலூர்பேட்டை பகுதிகள் மட்டும் கள்ளக்குறிச்சியுடன் இணைகிறது.இதில் மணலுார்பேட்டை உள்ளிட்ட கிராம பகுதியினர் கூட கள்ளக்குறிச்சியை விரும்புகின்றனர். ஆனால் திருக்கோவிலுார் மக்கள் விழுப்புரத்துடன் இணைந்திருக்க வேண்டும் என அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர்.



இந்நிலையில் அரகண்டநல்லுார், திருவெண்ணைநல்லுார், முகையூர் உள்ளிட்ட பகுதிகள் எங்கு கள்ளக்குறிச்சிக்கு சென்று விடுமோ என்ற அச்ச நிலையில் இருந்த இப்பகுதி மக்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாறாக திருக்கோவிலுார் நகரம் கள்ளக்குறிச்சியுடன் சேர்க்கப்படுகிறது என்ற அறிவிப்பு திருக்கோவிலுார் நகர மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மீண்டும் போராட்டங்களை நடத்த தயாராகி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X