| பள்ளிக்குளம்-மேல்அத்திப்பாக்கம் சாலை பஞ்சர்; பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி Dinamalar
பள்ளிக்குளம்-மேல்அத்திப்பாக்கம் சாலை பஞ்சர்; பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 நவ
2019
23:46

செஞ்சி : பள்ளிக்குளம் கிராமத்திலிருந்து மேல் அத்திப்பாக்கம் கூட்டுரோடு வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக மாறியதால் இந்த வழியாகச் செல்லும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



செஞ்சி தாலுகாவின் கடைசி பகுதி கிராமங்களாக பள்ளிக்குளம், கூத்தப்பாக்கம், எடமலை, இந்திரசன்குப்பம், நீர்பெருத்தகரம், மேல்அத்திப்பாக்கம், ஏதாநெமிலி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த கிராமங்களுக்குச் செல்ல பிரதான சாலையாக பள்ளிக்குளம் - மேல் அத்திப்பாக்கம் சாலை உள்ளது. செஞ்சி, திண்டிவனத்தில் இருந்து வருபவர்கள் விழுக்கம் கிராமம் வழியாக பள்ளிக்குளம் வருகின்றனர்.இங்கிருந்து, மேல்அத்திப்பாக்கம் வரை உள்ள 6 கி.மீ., சாலை வழியாகவே அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வேண்டும்.விழுக்கம் கிராம எல்லை வரை திண்டிவனம் தாலுகா உள்ளது. அதுவரை சரியாக உள்ள சாலை, பள்ளிக்குளத்தில் துவங்கி மேல் அத்திப்பாக்கம் கூட்டுரோடு வரை ஜல்லிகள் பெயர்ந்தும், பெரிய பள்ளங்கள், குழிகளுடனும் படு மோசமான நிலையில் உள்ளது.



இந்த கிராமங்களிலிருந்து திண்டிவனம், செஞ்சி, தீவனுார் பகுதி மழலையர் பள்ளி, மேல்நிலை பள்ளி, கல்லுாரிகளுக்கு ஏராளமானவர்கள் வருகின்றனர்.இவர்களுக்காக தனியார் கல்வி நிறுவனங்களின் வேன், பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், சிகிச்சைக்காக செஞ்சி, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கும் வந்து செல்கின்றனர். விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக வரும் ஆம்புலன்ஸ்கள் படுமோசமான சாலையால் உரிய நேரத்திற்கு வர முடியவில்லை.



விவசாய விளைபொருட்களையும் விவசாயிகள் இந்த வழியாக திண்டிவனம், செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலையில் பராமரிப்பு இல்லாததால் சாலைகளின் குறுக்கே உள்ள சிறிய கல்வெர்ட்டுக்கள் உள்வாங்கி ஆபத்தான நிலையில் உள்ளன.அத்துடன் பல இடங்களில் தண்ணீர் செல்லும் கால்வாய்கள் சாலையின் குறுக்கே உள்ளன. குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ள இந்த சாலையில் செல்லும் கார்கள் பள்ளத்தில் சிக்கி சேதமாகிறது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.பொது மக்களின் அவதி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலை புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X