குஜிலியம்பாறை,:குஜிலியம்பாறையில் இருந்து மல்லப்புரம் வழியாக மாலை நேரத்தில் பஸ் வசதி இல்லாததால், பள்ளி மாணவிகள் இரண்டு மணி நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கின்றனர்.குஜிலியம்பாறையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு, உல்லியக்கோட்டை ஊராட்சி முத்தம்பட்டி, தவசிபட்டி, பெருமாம்பட்டி, மணியகாரன்பட்டி, மல்லப்புரம் ஊராட்சி பல்லாநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நுாற்றுக் கணக்கான மாணவர்கள் வருகின்றனர். இவர்கள் மாலை 4:15 மணிக்கு பள்ளி முடிந்த பின், மாலை 6:20 மணிக்குத்தான் ஒரு டவுன் பஸ் உள்ளது. உல்லியக்கோட்டை, மல்லபுரம் வழியாக ஈசந்த்தம் செல்லும் இப்பஸ்சில்தான் அத்தனைபேரும் அடித்துப் பிடித்து ஏறிச் செல்கின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் கூறுகையில், ''பள்ளி முடிந்தபின் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் 2 மணி நேரம் காத்திருந்து பஸ்சுக்கு செல்கின்றனர். இம்மாணவர்களின் நலன் கருதி 4:45 மணிகக்கு குஜிலியம்பாறையில் இருந்து உல்லியக்கோட்டை, மல்லப்புரம் வழியாக டவுன் பஸ் விடவேண்டும். இல்லையெனில் போராட முடிவெடுப்போம்'' என்றார்.