பரமக்குடி:பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், சமூக நலத்துறை சார்பில் 400 பெண்களுக்கு 2 கோடியே 75 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திருமண நிதியுதவி, 8 கிராம் விலையில்லா தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., சதன் பிரபாகர், ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தனர்.கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:
திருமண நிதியுதவி திட்டத்தில் இதுவரை 22,972 ஏழைப் பெண்கள் 93.16 கோடி ரூபாயில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் பெற்றுள்ளனர். 2017 முதல் 4 கிராம் தங்கத்தை 8 கிராமாக அரசு உயர்த்தி வழங்கி வருகிறது. 2017- முதல் தற்போது வரை 8,261 ஏழைப் பெண்கள் 51.19 கோடி ரூபாய் நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் பெற்றுள்ளனர்.
பரமக்குடி தொகுதிக்கு உட்பட்ட 255 பட்டதாரி பெண்கள், 145 பட்டதாரி அல்லாத பெண்கள் என 400 பேருக்கு திருமண உதவித் தொகையாக 1 கோடியே 63 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயும், 1 கோடியே 12 இலட்சம் மதிப்பிலான தாலிக்குத் தங்கமும் வழங்கப்படுகிறது.
ஐந்து திருநங்கைகளுக்கு சுயதொழில் துவங்குவதற்காக தலா 50 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது என்றார். மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேவுகப்பெருமாள், செந்தாமரைச்செல்வி, அ.தி.மு.க, மாவட்ட இளைஞரணி செயலாளர் வின்சென்ட் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.