சாயல்குடி:சாயல்குடியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் வாகன ஓட்டிகள், மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
சாயல்குடியில் ராமநாதபுரம் --துாத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை, அருப்புக்கோட்டை சாலையில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை 8:00 முதல் 10:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.
துாத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் வாறுகால் அருகே டூவீலர்களை வரிசையாக நிறுத்தி விடுவதால் அதிக இடையூறு ஏற்படுகிறது.மேலும் கடைகளின் விளம்பர ஸ்டாண்ட் போர்டுகளை ஒவ்வொரு கடையின் முன்பும் ரோட்டில் வைத்துள்ளனர். இதனால் சாலையில் செல்லும் அரசு பஸ்கள், கனரக வாகனங்கள் செல்ல வழியின்றி தவிக்கின்றனர். போக்குவரத்தை முறைப்படுத்த போலீசாரும் பற்றாக்குறையான நிலையில், சாயல்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு பொது மக்கள் புகார் செய்த பிறகே போலீசார் வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்:
வளர்ந்து வரும் சாயல்குடி நகருக்கு ராமேஸ்வரம், துாத்துக்குடி, கன்னியாகுமரி, அருப்புக்கோட்டை, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்காக ஏராளமான சுற்றுலா பஸ்கள், வேன்களில் வருவோர் டீ சாப்பிட வேறு வழியின்றி சாலையோரம் பார்க்கிங் செய்கின்றனர். ஓட்டல், டீக்கடை, கடைகளிலும் ஒதுக்கப்பட்ட இடங்களை கடந்து ஆக்கிரமித்து உள்ளனர்.
ஆண்டிற்கு ஒருமுறை பெயரளவிற்கு நடத்தப்படும் ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைத்து விடுகின்றன. ரோட்டோரங்களில் அடுப்புகளை வைத்து சமையல் செய்வதால் நடந்து செல்வோர் புகையால் அவதிப்படுகின்றனர். எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம், கடலாடி வருவாய்த்துறையினர் போலீசாருடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.