கமுதி:கமுதி சத்ரிய நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மாவட்டஅளவிலான தடகள போட்டிகளில் தொடர் ஓட்டத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. அதில் சத்ரிய நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்று மாநில தடகள போட்டிக்கு தேர்வு பெற்றனர். 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவர் தீபன் 3,000 மீ., ஓட்டத்தில் முதலிடம், 1,500 மீ.,ல் இரண்டாமிடம், தரணீஸ்வரன் 400 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம், 800 மீ., ல் இரண்டாமிடம், மாணவர் முத்துகிருஷ்ணன் போல்வால்ட் போட்டியில் இரண்டாமிடம், வசந்தமார், சதீஸ்குமார், முத்துகிருஷ்ணன், தரணீஸ்வரன் குழுவினர் 1,600 மீ., தொடர் ஓட்ட போட்டியில் முதலிடம் பெற்றனர்.இதே போல் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் கோபிநாத் 1,500 ஓட்டத்தில் முதலிடம், 800 மீ., ல் இரண்டாமிடம், பன்னீர்செல்வம், உதயக்குமார், கோபிநாத், சோலைப் பாண்டி குழுவினர் 400 மீ., தொடர் ஓட்டத்தில் முதலிடம், முகிலன், சோலைபாண்டி, கோபிநாத், உதய குமார் குழுவினர் 1,600 மீ., தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பன்னீர்செல்வம், வீரவேல்முருகன் ஆகியோரையும் பள்ளி செயலர் சிவமுருகன், பள்ளி நிர்வாகக்குழுவினர் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.