திருவொற்றியூர்:திருவொற்றியூரில், பெண் போலீசாருக்கு மன அழுத்தம் போக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
சென்னையில் பணிபுரியும் காவலர்கள், கூடுதல் பணிச்சுமை, விடுமுறை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இவர்களின் மன அழுத்தத்தை போக்க, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்படி, போலீசாருக்கு காவல் நிலையங்களில், உளவியல் பயிற்சி நடத்த உத்தரவிடப்பட்டது.அதன்படி, திருவொற்றியூர் காவல் நிலையத்தில், 25க்கும் மேற்பட்ட பெண் போலீசாருக்கு, உளவியல் நிபுணர் கீதா பிரேம்குமார், மன அழுத்தம் போக்கும் பயிற்சிகளை, நேற்று முன்தினம் வழங்கினார்.
மன அழுத்தத்தை புரிந்து கொள்ளுதல், மன அழுத்தத்தால் உடலில் ஏற்படும் விளைவுகள், மன அழுத்தத்தால் ஏற்படும் உளவியல் பிரச்னைகள், வேலைப்பளு மற்றும் குடும்ப வாழ்க்கை முறையால் ஏற்படும் மன அழுத்தத்தை புரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட, 40 தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.