எண்ணுார்:'டெங்கு' காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் நடத்திய, 'மைம்' மற்றும் நாடகம், பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.
எண்ணுார், நெட்டுக்குப்பம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், நேற்று முன்தினம் மதியம், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி மாணவ - மாணவியர், தலைமை ஆசிரியர் லெஸ்லி தலைமையில், பள்ளி வளாகத்தில் இருந்து, தாழங்குப்பம் சந்திப்பு வரை, விழிப்புணர்வு வாசகங்கள் முழங்கியபடி, பேரணி வந்தனர்.பின், அங்கு முகாமிட்டு, டெங்கு காய்ச்சல் பாதிப்பு, தடுக்கும் வழிமுறை, சிகிச்சை முறை குறித்து விளக்கும் வகையில், முகத்தில் வர்ண சாயம் பூசி, மவுனமாக நடித்து காண்பிக்கும், 'மைம்' எனும் கலை வழியாக, நாடகம் நிகழ்த்தினர்.
தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற, 'டெங்குவை ஒழிப்போம்' எனும் வீதி நாடகம் நடந்தது.இதில், டெங்குவால் ஏற்படும் உயிரிழப்பு, கொசுப்புழு வளரும் இடங்கள் குறித்து, மாணவர்கள் தெளிவாக விளக்கி, நடித்து காண்பித்தது, பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.நிறைவாக, மாணவர்கள், தாழங்குப்பம் சந்தை வியாபாரிகளுக்கு, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், அரசு மருத்துவமனையை அணுக கூறி, நிலவேம்பு கஷாயம் வினியோகித்தனர்.நிகழ்ச்சியில், திருவொற்றியூர் மண்டல நல அலுவலர் இளஞ்செழியன், பூச்சியியல் வல்லுனர் சாந்தி மற்றும் மாணவ - மாணவியரின் பெற்றோர் என, பலரும் பங்கேற்றனர்.