சென்னை:அரசின் வேலைவாய்ப்பு துறை சார்பில், தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம், சென்னையில் நாளை நடக்க உள்ளது.
தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கட்டுப்பாட்டில், வேலைவாய்ப்பு பதிவு அலுவலகங்கள், மாவட்டந்தோறும் செயல்படுகின்றன. அவற்றில், 10ம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை முடிப்பவர்கள், அரசு வேலைக்காக பதிவு செய்து வைத்துள்ளனர்.இந்த பதிவுகளின் மூப்பு அடிப்படையில், சில அரசு துறைகளில், வேலைவாய்ப்பு வழங்கப்படும். அதேநேரம், அரசு துறை அல்லாத தனியார் நிறுவனங்களுக்கும், அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாக பணி நியமனம் வழங்கப்படுகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில், இதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த வார முகாம், சென்னை, கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில், காலை, 10:00 மணி முதல், மாலை வரை நடக்க உள்ளது.இதில், 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. எட்டாம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படித்தவர்கள், பங்கேற்கலாம் என, வேலைவாய்ப்பு துறை கமிஷனர் விஷ்ணு தெரிவித்தார்.