அண்ணாசாலை:'ஷாப்பிங் மால்' கழிவு நீர் தொட்டியில், விஷ வாயு தாக்கி வாலிபர் இறந்த வழக்கில், புதிய சட்டப்பிரிவின் கீழ், போலீசார் வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ராயப்பேட்டையில் உள்ள, எக்ஸ்பிரஸ் அவென்யூ' மாலில், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷ வாயு தாக்கி, அருண்குமார், 25, என்ற வாலிபர், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இது தொடர்பாக, வழக்கு பதிந்த அண்ணாசாலை போலீசார், மனித கழிவுகளை அள்ள மனிதர்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தின் கீழ், அவரை பணிக்கு அழைத்துச் சென்ற ஒப்பந்ததாரர் தண்டபாணி, 38, என்பவரை கைது செய்தனர்.
அண்ணா சாலை ஆய்வாளர் கூறியதாவது:கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய, மனிதர்களை இறக்கக்கூடாது என, தேசிய துப்புரவாளர் ஆணைய விதி உள்ளது. அதை பொருட்படுத்தாமல், மனிதர்களை பயன்படுத்தி, சுத்தம் செய்கின்றனர். இதில், உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில், பொதுவாக, ஐ.பி.சி., பிரிவு, 304 (1) அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருத்தல் என வழக்கு பதியப்படும்.அருண்குமார் உயிரிழப்பிற்கு காரணமான ஒப்பந்ததாரர் மீது, மனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த தடை மற்றும் மறுவாழ்வு சட்டம், 2019ன் கீழ், வழக்கு பதிவு செய்துள்ளோம்.
இந்த வழக்கு பதிவு செய்துள்ளதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, உடனடியாக, 10 லட்சம் ரூபாய், 'எக்ஸ்பிரஸ் அவென்யூ' உரிமையாளர் சார்பில் வழங்கப்பட வேண்டும்.சென்னையில், முதன்முறையாக இந்த சட்டத்தின் கீழ், அண்ணா சாலை காவல் நிலையத்தில் தான், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.