காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் சூதாட்டம், கொடிகட்டி பறக்கிறது. இதற்கு உடந்தையாக உள்ள கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுக்க, வடக்கு மண்டல, ஐ.ஜி., 'சாட்டையைச் சுழற்று'வாரா என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் நகரில், தமிழக அரசு தடை செய்த, மூன்று நம்பர் சூதாட்டம் குடிசைத் தொழில் போல் நடக்கிறது.ஒருவர், 60 ரூபாய் செலுத்தி, மூன்று நம்பர் ஒன்றை பதிவு செய்தால், அவர்களின் மொபைல்போனுக்கு, முடிவு அறிவிக்கப்படும்.உதாரணமாக, ஒருவர், 165 என்ற எண் மீது பணம் கட்டி, மூன்று நம்பரும் வந்தால், 22 ஆயிரம் ரூபாய்; இரண்டு நம்பர் வந்திருந்தால், 1,000; ஒரு நம்பர் மட்டும் வந்தால், 100 ரூபாய் கிடைக்கும்.திருவள்ளூர் பஸ் நிலையம் அருகில், ஏரிக்கரை சாலை; பஜார் வீதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம்; பஜார் தெருவில் மசூதி அருகில்; முகமதலி தெரு, டவுன் காவல் நிலையம் அருகிலேயே, மூன்று இடங்கள் என, 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சூதாட்டம் நடக்கிறது.'திருவள்ளூர் நகரில், மூன்று நம்பர் சூதாட்டம் நடத்தக் கூடாது; மீறி நடத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜன், எச்சரிக்கை விடுத்திருந்தார்.ஆனால், அவரது எச்சரிக்கையை மீறியும், மூன்று நம்பர் சூதாட்டம் நடப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
சூதாட்டம்
இது குறித்து மேலும், அவர்கள் கூறியதாவது:திருவள்ளூர் நகரில், மூன்று நம்பர் சூதாட்டத்தை, போலீசார், கண்டும், காணாமல் இருப்பதை, 'மாமூலாக' கொண்டுள்ளனர்.அவ்வப்போது, ஒன்றிரண்டு வழக்குகளை பதிவு செய்து, நடவடிக்கை எடுப்பதாக, கணக்கு காண்பித்துக் கொள்கின்றனர்.இதனால் தினமும், அப்பாவிகள், ஏழைகள் நுாற்றுக்கணக்கானோர், இந்த சூதாட்டத்தில், பணத்தை இழந்து தவிக்கின்றனர்.எனவே, வடக்கு மண்டல, ஐ.ஜி., சூதாட்டத்தை ஒழித்தும், அதற்கு, துணை போகும், 'கறுப்பு ஆடு'கள் மீது, சாட்டையை சுழற்றி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் பகுதிகளில், மூன்று நம்பர் சூதாட்டம் நடத்தும் மோசடி கும்பல், சிலருக்கு பரிசு விழுந்தாலும் பணத்தை தராமல் மோசடி செய்வதாக கூறப்படுகிறது.சட்ட விரோதம் என்பதால், பரிசு தொகை கிடைக்கவில்லை என, புகார் அளிக்க முடியாமல், அவர்கள் புலம்புகின்றனர்.இந்த லாட்டரி சூதாட்டத்தில், ஒருமுறை ஒருவர் ஈடுபட்டால், நாளடைவில் முழுமையாக சூதாட்டம் ஆடும் நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறார். இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது இளைஞர்கள் தான்.படித்து முடித்து, வேலை கிடைக்காமல் இம்மாதிரியான இளைஞர்களை குறிவைத்து, இந்த சூதாட்டம் ஜோராக நடக்கிறது.
தினக்கூலி
தினக்கூலியாக இருக்கும் தொழிலாளர்கள் பலரும், இதில் அடிமையாகி, தினமும், ஆயிரக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர், போலீஸ், டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உட்பட அனைவருக்கும், மாதந்தோறும் மாமூல் கொடுக்கின்றனர்.லாட்டரி சீட்டு மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வோரை கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டால் மட்டுமே, போலீசார் கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.
- நமது நிருபர் -