| தென்னையை வைத்தால் கண்ணீரு...கொப்பரை விலை கடும் சரிவால் விவசாயிகள் வேதனை; பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தது விலை Dinamalar
தென்னையை வைத்தால் கண்ணீரு...கொப்பரை விலை கடும் சரிவால் விவசாயிகள் வேதனை; பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தது விலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
03:24

உடுமலை:தேங்காய் மகசூல் குறைவு, மழையால் உற்பத்தி பாதிப்பு என பல சிக்கல்கள் இருந்தாலும், கொப்பரை விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில், உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், தேங்காய்களை உடைத்து, கொப்பரையாக உற்பத்தி செய்யும், 200க்கும் மேற்பட்ட கொப்பரை களங்கள் உள்ளன. விவசாயிகள் நேரடியாகவும், தேங்காய்களை கொள்முதல் செய்து கொப்பரைகள் உற்பத்தி செய்யப்பட்டு, காங்கயத்திலுள்ள எண்ணை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
உடுமலை பகுதிகளில், நாள் ஒன்றுக்கு, நுாறு டன் வரை கொப்பரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. வறட்சி, வெள்ளை ஈ தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், தென்னை மரங்கள் காய்ந்தும், காய்ப்பு குறைந்தும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இடைத்தரகர்கள், எண்ணை நிறுவனங்களின் 'சிண்டிகேட்' காரணமாக, கொப்பரைக்கான விலை கடுமையாக சரிந்துள்ளது. 105 முதல் 115 வரை கொப்பரை விலை இருந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக தொடர்ந்து விலை சரிந்து வந்தது.கடந்த ஒரு வாரத்தில், மேலும் சரிந்துள்ளது.கடந்த வாரம், முதல் ரகம், கிலோ, ரூ. 104 வரை இருந்த நிலையில், ஒரு வாரத்தில், கிலோவுக்கு, 10 ரூபாய் வரை குறைந்து, தற்போது, ரூ.93 முதல் 94 ரூபாய்க்கு மட்டுமே விற்கிறது. இரண்டாம் தரம், 97 முதல் 98 ரூபாயாக இருந்தது, 88 முதல் 89 ரூபாயாக குறைந்துள்ளது. கொப்பரை விலை சரிவால், தேங்காய் விலையும் குறைந்துள்ளது.கடந்த வாரம், ஒரு டன் பச்சை தேங்காய், 30 ஆயிரம் வரை விற்றது, தற்போது, 27 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. டன், 32 ஆயிரம் ரூபாய் வரை விற்ற, கருப்புக்காய் விலை, 28 ஆயிரம் முதல் 29 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது.அதே போல், தென்னை மட்டை விலையும் குறைந்துள்ளது. கடந்த வாரம், ஆயிரம் பச்சை மட்டை, 1,500 ரூபாய்க்கு விற்றது; தற்போது, 1,200 ரூபாயாக குறைந்துள்ளது. கருப்பு மட்டை, ரூ.1,200 ஆக இருந்தது, ரூ. 900 ஆக குறைந்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தென்னை விவசாயிகள் கூறியதாவது : வறட்சி, நோய்த்தாக்குதல் மற்றும் கஜா புயல் காரணமாக, தென் மாவட்டங்களில் அழிவு என, தேங்காய் வரத்து, பெருமளவு குறைந்துள்ளது. வியாபாரிகள் சிண்டிகேட், தேங்காய் எண்ணெய்யில் கலப்படம், இறக்குமதி உள்ளிட்ட காரணங்களினால், கொப்பரை விலை சரிந்து வருகிறது.அரசு கொப்பரை கொள்முதல் நிலையங்கள் திறந்தும் விவசாயிகளுக்கு பயனில்லை.எனவே, கொப்பரைக்கான ஆதார விலையை உயர்த்தி, கட்டுப்பாடு இல்லாமல் கொள்முதல் செய்யவும், வியாபாரிகள் சிண்டிகேட் முறைகேடுகளை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X