கும்மிடிப்பூண்டி:கீழ்முதலம்பேடு ஏரியில், ரசாயன கழிவுகள் கலந்திருப்பதால், ஏரி நீர், நிறம் மாறியதுடன், பூச்சி கொல்லி மருந்து போன்று நெடி ஏற்றும் வாடை, கிராமம் முழுவதும் வீசுகிறது.
மக்கள் பயன்பாட்டிற்கும், கால்நடைகள் மற்றும் விவசாயத்திற்கும் அந்த ஏரி நீரை பயன்படுத்துவதால், கிராம மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.கவரைப்பேட்டை அருகே உள்ள கீழ்முதலம்பேடு ஏரி, பொது பணித்துறை பராமரிப்பில் உள்ளது. மொத்தம், 300 ஏக்கர் பரப்பு கொண்ட அந்த ஏரியின் நீர், பாசனத்தை நம்பி, 605 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.மேலும், அந்த ஏரியின் உபரி நீர், ஐந்து மதகுகள் வழியாக, அதன் கீழ் உள்ள, பன்பாக்கம், கிளிக்கோடி, பரனம்பேடு, பெருவாயல், கனகம்பாக்கம், ஏலியம்பேடு, காட்டாவூர் உள்ளிட்ட 20 ஏரிகளை சென்றடைகிறது.
மூன்று தினங்களாக, கீழ்முதலம்பேடு ஏரியை ஒட்டிய பகுதியில், பூச்சி கொல்லி மருந்தை போன்று, நெடி ஏற்றும் துர்நாற்றம் வீசி வருகிறது.ஏரியின் மேற்பரப்பு நிறம் மாறியதுடன், ரசாயன கழிவுகள் படர்ந்து காணப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் மூலம் பொதுப்பணித் துறை, பி.டி.ஓ., வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், எந்த அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை என, கிராம மக்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
அந்த ஏரி நீரை, விவசாய நீர் பாசனத்திற்கு மட்டுமின்றி, அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஆயிரக்கணக்கான கால்நடைகள், அந்த ஏரி நீரை பருகி வருகிறது. ஏரி நீரின் தன்மை மாறியதால், அச்சம் அடைந்த கிராம மக்கள், மூன்று தினங்களாக அந்த நீரை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர்.
தகவல் அறிந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக குழுவினர், நேற்று ஏரியில் ஆய்வு மேற்கொண்டு, ஏரியில் படர்ந்திருந்த ரசாயன கழிவுகளை, பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.ஏரி நீரில் ரசாயன கழிவுகள் கலந்ததால், ஏரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கிராம மக்களும், கால்நடைகளும், ஏரி நீரை பயன்படுத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றோம்வா.நாகராஜ், கீழ்முதலம்பேடுஆய்வு மேற்கொள்ளப்படும்.
பெயர் வெளியிட விரும்பாத சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'பாலவாக்கம் பாலம் அருகே, ஆரணி ஆற்றில் கலக்கப்பட்ட ரசாயன கழிவுகள், மழை நீருடன் கலந்து, ஏ.என்.குப்பம் அணைக்கட்டு வந்தடைந்தது.'அங்கிருந்து பாசன கால்வாயை கடந்து, முதல் ஏரியான கீழ்முதலம்பேடு ஏரிக்கு, ரசாயன கழிவுகள் கலந்த தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. உரிய ஆய்வு மேற்கொண்டு, ஏரி நீரை பாதுகாத்து, சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தார்.