மணவாளநகர்:மணவாள நகர் பகுதியில், கொசுப்புழு வளர்த்த மூன்று வீடுகளுக்கு, 16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாள நகர் பகுதியில் ஊரக வளர்ச்சி துறையினருடன் சுகாதாரத் துறையினர் இணைந்து, தீவிர காய்ச்சல் தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.மணவாள நகர் பகுதியில், ஊரக வளர்ச்சி துறை உதவி திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வட்டார வளர்ச்சி அலுவலர் லதா மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிசந்திரன் ஆகியோர் தலைமையில் வீடுகளில் கொசுப்புழு வளர்ந்துள்ளதா என, ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆயவில், அப்பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரது வீட்டில் குடிநீர் தொட்டியில் கொசுப்புழு வளர்ந்திருந்ததை கண்டறிந்து, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.இதேபோல், உமாசங்கர் என்பவரது வீட்டின் மாடியில் கட்டட பணி நடந்து வரும் பகுதியில் கொசுப்புழுவை கண்டறிந்து, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.மேலும், கங்காதரன் என்பவரது வீட்டின் காலிமனையில் கழிவுநீர் தேங்கியிருந்ததால், 1,000 ரூபாய் அபராதமும் என, மொத்தம், 16 ஆயிரம் ரூபாய் அபராதத்தை சுகாதாரத் துறையினர் விதித்தனர்.இதையடுத்து, மேலும் ஊராட்சி நிர்வாகத்திடம் அபராதம் வசூலிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.