| நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுப்பில்...இழப்பீடு என்னாச்சு!அதிகாரிகள் மேல் விவசாயிகள் அதிருப்தி Dinamalar
நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுப்பில்...இழப்பீடு என்னாச்சு!அதிகாரிகள் மேல் விவசாயிகள் அதிருப்தி
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
05:18

பொள்ளாச்சி:பொள்ளாச்சி --- திண்டுக்கல்லை இணைக்கும், 3,649 கோடி ரூபாய் மதிப்பிலான, நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தில், நில உரிமையாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக, ஆர்.டி.ஓ.,விடம் புகார் அளிக்கப்பட்டது.



மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில், பொள்ளாச்சி - திண்டுக்கல்லை இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் கடந்தாண்டு அறிவிக்கப் பட்டது.பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் கமலாபுரம் வரையில், 131.96 கி.மீ.,க்கு அமைக்கப்படும் சாலையில், 106.693 கி.மீ., (80 சதவீதம்) புறவழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த திட்ட மதிப்பு, 3,649 கோடி ரூபாய்.இந்த பணிக்கான பூமி பூஜை, கடந்த மார்ச் மாதம் லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் நடந்தது.



அதன் பின், பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.இந்தப் பணிக்காக, பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட, 10 கிராமங்களில், 259 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில், பெரும்பாலும் விவசாய நிலமாகும்.கையகப்படுத்தும் இடங்களில், 10,095 தென்னைகள் உட்பட, 11,936 மரங்கள், 100க்கும் மேற்பட்ட வீடுகள், தொழிற்சாலைகள், கட்டடங்கள் அகற்றப்பட உள்ளன.



நிலம் மற்றும் சொத்துகளின் உரிமையாளர்களுக்கு, இதுவரை இழப்பீடு வழங்காத நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் வருவாய் துறை நில எடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கையில் வெளிப்படை தன்மையில்லை என நில உரிமையாளர்கள் நேற்று சப் - கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ரவிக்குமாரிடம் மனு அளித்தனர்.



நில உரிமையாளர்கள் கூறியதாவது:திட்டம் அறிவிக்கப்பட்டு, நில உரிமையாளர்கள் கருத்துக் கேட்பு கூட்டம் மற்றும் தொடர்ந்து நடந்த சந்திப்புக்களில், எடுக்கப்படும் நிலத்துக்கு, சந்தை மதிப்பிலான விலை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.மேலும், ஒரு தென்னை மரத்துக்கு, 64,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றனர். ஆனால், இது வரை நிலத்துக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமான உறுதி வழங்கவில்லை.



நில உரிமையாளர்களுக்கு வாய் மொழியாக அதிகாரிகள் கூறிய இழப்பீட்டு தொகைகளில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. இழப்பீடு வழங்காமலேயே, நில உரிமை பத்திரங்களை வற்புறுத்தி வாங்குகின்றனர்.இது, அதிகாரிகள் மேலுள்ள நம்பகத்தன்மையை குலைத்துள்ளது. இழப்பீடு குறித்து எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்,' என்றனர்.



மனுவை பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ., ''நிலம் எடுப்பு சட்டப்படி, நில உரிமையாளர்களின் உரிமைகள் காக்கப்படும். மாவட்ட வருவாய் அலுவலருக்கு பிரச்னை குறித்து தெரிவிக்கப் படும்,'' என உறுதியளித்தார். இதையடுத்து, நில உரிமையாளர்கள் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X