வால்பாறை:வால்பாறையில் குழாய் உடைந்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை மக்களுக்கு, எட்டு கி.மீ., தொலைவில் உள்ள அக்காமலை தடுப்பணையில் இருந்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர், குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், வால்பாறை நடுமலை ரோட்டில் கடந்த மூன்று நாட்களாக குழாய் உடைந்து, குடிநீர் பெருக்கெடுத்து செல்கிறது. நகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை, என, பொதுமக்கள் தெரிவித்தனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நடுமலை ரோட்டில் கட்டுமானப்பணி நடப்பதால், பணியின் போது குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. குடிநீர் குழாயின் மேல் ஜல்லி போடப்பட்டுள்ளது. அகற்றிய பின், குழாய் உடைப்பு சரிசெய்யப்படும்,' என்றனர்.