சூலுார்:இருகூரில் மேம்பாலம் முறையாக பராமரிக்கப்படாததால், சேதமடைந்து வருகிறது.
சூலுார் அடுத்த இருகூர் பிரிவில் இருந்து, இருகூர் வரை, மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வேத்துறை இணைந்து கட்டிய மேம்பாலம் உள்ளது. அரை கி.மீ., துாரமுள்ள இப்பாலம், கட்டப்பட்டு, பல ஆண்டுகள் ஆகின்றன.பாலத்தின் மீது ஓடும் மழைநீரை, வெளியேற்றும் வகையில், பாலத்தின் பக்கவாட்டு சுவரில், பெரிய குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக, பாலத்தை முறையாக பராமரிக்காததால், குழாய்கள் உடைந்துள்ளன. இருக்கும் குழாயிலும் பாலத்திலும் செடிகள் முளைத்துள்ளன. இதனால், பாலத்தின் உறுதித் தன்மை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இருகூர் மக்கள் கூறியதாவது:இருகூர் மேம்பாலத்தில், தண்டவாளத்தின் மேற்பகுதி ரயில்வே துறையினாராலும், மற்ற பகுதிகள் நெடுஞ்சாலைத் துறையினராலும் கட்டப்பட்டன.
ரயில்வே ஊழியர்கள், அடிக்கடி தங்கள் பகுதியில் பராமரிப்பு செய்து, அறிவிப்பு பலகையும் வைக்கின்றனர்.ஆரம்பத்தில் பராமரிப்பில் கவனம் செலுத்திய நெடுஞ்சாலைத்தறை, அதன் பின்னர் பராமரிப்பு பணிகளை முறையாக செய்யவில்லை. இதனால், மழைநீர் வெளியேறும் குழாய்கள் சேதமடைந்து தொங்குகின்றன.பல பகுதிகளில், குழாய்களை காணவில்லை. மழை பெய்தால், பாலத்தில் இருந்து மழைநீர் ஒழுகுகிறது.
மேம்பாலத்தின் மீதுள்ள மண்ணை அகற்றாதால், அவை, மழைநீர் குழாய்களில் தேங்கி, அதில் மரக்கன்றுகள், செடிகள் வளர்ந்துள்ளன.இதனால், பாலத்தின் உறுதித் தன்மை குறைந்து வருகிறது. உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் கூறினர்.